மழைச்சாரல் – 19 [இழந்த மழை]

மழைச்சாரல் – 19 [இழந்த மழை]

மழைச்சாறல் – இழந்த மழை

மழைச்சாறல் – இழந்த மழை

இரவோடிரவாய்
வந்து போய் விட்டிருக்கிறது
மழை.

முன்வாசல் மரங்களின்
இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும்
நீர்த்துளிகள்

நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!

காயத்ரி சித்தார்த்

மழைச்சாரல்  – 18 [மழைநாள்]

மழைச்சாரல் – 18 [மழைநாள்]

மழைச்சாறல் – மழைநாள்

மழைச்சாறல் – மழைநாள்

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை

– மனுஷ்ய புத்திரன்

மழைச்சாரல்  – 17 [காதல்]

மழைச்சாரல் – 17 [காதல்]

மழைச்சாறல் –  காதல்

மழைச்சாறல் – காதல்

வாசம் ததும்ப விட்டு
பெய்யுது மழை
முள்ளில் சிக்கிய வண்ணத்துப்பூச்சி
மழை நீர் சொட்ட
சடசடத்து உதிர்க்கிறது
ஞாபக வர்ணங்களை
உடம்புலுக்கி நீர் உதறும் காகங்கள்
மழைக்கு ஒதுங்கிய வெள்ளாடுகள்
விலுக்கென பறக்கும் வவ்வால்
அதே குளிர்
அதே காற்று
நீதான் இல்லை
ஏதேதோ நேசிக்கக் கற்றுத்தந்த
நேசிகையே
இதோ வானத்தைப் பிரிந்த
மழை வந்து சொல்லுது ஆறுதல்
சொப் சொப்பென
டப்டப்பென
உனக்குமிந்த மழை
அங்கேதும் சொல்லுதா
இந்நேரம்

– (ரவிசுப்ரமணியன், ‘காத்திருப்பு’)

மழைச்சாரல்  – 16 [தாகம்]

மழைச்சாரல் – 16 [தாகம்]

மழைச்சாறல் - தாகம்

மழைச்சாறல் – தாகம்

காதுமடல்களை செதுக்கிக் கொண்டு
கடக்கிற காற்று
கண்களுக்குப் பின்னால்
ஏதோ ராகத்தில் அசைகிறது.

தலைக்கு மேலே ஓடிய மேகம்
என்னை வாசலென நினைத்து
தெளிக்கிறது

விலைபேச முடியாத வாசத்தை
காற்றின் சிறகில் ஏற்றிக் கொண்ட
மழை
தள்ளாடித் தள்ளாடி சிதறுகிறது
மண்ணின் தாகங்களிலெல்லாம்

முடிவும் தொடக்கமுமற்றுப்போன
ஈரத்தின் ஆனந்தத்தில்
நதி நெடுக
ராட்டினமாடி விளையாடுகின்றன
மழையின் சுவடுகள்

பின்
துளிகளோடு பொழிந்து
நீலம் வெளுத்துக் கிடக்கும்
வானத்தை
வாசல் பள்ளத்தில்
கடக்கிற போதெல்லாம்

காலுக்கடியில்
மறுகுகிறது மனது
மற்றுமொரு மழைக்காய்.

— (தேன்மொழி, ’அநாதி காலம்’)

மழைச்சாரல்  – 15 [தண்ணி நூல்]

மழைச்சாரல் – 15 [தண்ணி நூல்]

மழைச்சாறல் -  தண்ணி நூல்

மழைச்சாறல் – தண்ணி நூல்

நேற்றுப் பெய்த மழை
ஸ்ருதியினுடையது.
தண்ணி நூல் என்று
பெயர் வைத்திருந்தாள்.

இன்றைய மழை
அமுதாவினது.
டம் டம் என்பது
அதன் பெயர்.

நாளைய மழைக்கு
ரெயின் என்று பெயர் வைத்து
காத்திருக்கிறான்
டிச்சாங்கா எனப்படும்
த்ரிஷாங்கன்.

கால காலமாக
கனகோடி நூறாண்டாக
பெய்யெனப் பெய்து
வையத்தை வாழ்வித்தபடி
பொழிந்தபடி இருக்கும்
இந்தப் பெருமழை
புன்னகையோடு
பிள்ளைகள் வைக்கும்
பெயருக்காகவும்
பெய்தபடி இருக்கிறது.